சேலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெண்ணந்தூர் அரிசி வியாபாரியிடம் போலீசார் விசாரணை
சேலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வெண்ணந்தூரை சேர்ந்த அரிசி வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சூரமங்கலம்,
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அதில், எனக்கு ரெயில்வே துறையில் பணி வழங்கி மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். நான் வறுமையில் வாடுகிறேன்.
என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும். மேலும், சேலம் வழியாக செல்லும் ரெயில்களிலும் வெடிகுண்டு வெடிக்கும். 100-க்கும் மேற்பட்ட உயிர் சேதம் இருக்கும் என்றும், இப்படிக்கு மணிவேல் என்று கையெழுத்து போட்டும் இருந்தது.
இதைத்தொடர்ந்து ரெயில்வே கோட்ட மேலாளர், அந்த கடிதத்தை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் வழங்கி புகார் செய்தார். அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
மேலும், பயணிகளின் உடைமைகள் மற்றும் வாகனங்களில் வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து தீவிரமாக சோதனையிடப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாரும் சேலம் வழியாக சென்ற ரெயில்களில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆம்னி வேன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வேன் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி மணிவேல் (வயது 50) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர், ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஏதும் அனுப்பவில்லை? என்றும், தனது பெயரில் வேறு நபர்கள் அனுப்பி இருக்கலாம்? என்று தெரிவித்தார்.
இருப்பினும், அவர் கூறியது உண்மையா? அல்லது நாடகமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். இது ஒருபுறம் இருக்க, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மணிவேலுவுக்கும், வேறு சிலருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வருவதாகவும், இதனால் மணிவேலை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் அவரது பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நேற்று காலை முதல் மதியம் வரையிலும் அரிசி வியாபாரி மணிவேலிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி விட்டு அதன்பிறகு அவரை விடுவித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக வெடிகுண்டு நிபுணர்கள், ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை செய்தனர். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரித்தனர்.