அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட குழந்தைக்கு மருந்து மாற்றி கொடுத்ததால் பரபரப்பு
பாண்டமங்கலம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுச்சென்ற குழந்தைக்கு காய்ச்சல் தடுப்பு மருந்துக்கு பதிலாக வேறு மருந்து மாற்றி கொடுத்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர்,
பொத்தனூரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 28). இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு பிறந்து 55 நாட்களே ஆன டெய்ஸி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக பொத்தனூர் பகவதியம்மன் கோவில் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு செவிலியர் இல்லாததால் பாண்டமங்கலத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்த கோப்பணம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். மேலும் தடுப்பூசி போட்டதால் குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் கொடுப்பதற்காக காய்ச்சல் தடுப்பு மருந்து பெட்டியும் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு லேசாக காய்ச்சல் வந்தவுடன் குழந்தையின் தாய் அனிதா காய்ச்சல் தடுப்பு மருந்து பெட்டியை திறந்து மருந்தை எடுத்து பார்த்தபோது கீரி பூச்சிமருந்து இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருந்தை கொண்டு சென்று மருத்துவரிடம் விளக்கம் கேட்டபோது, இது ஒரு வயதிற்கு மேலான குழந்தைக்கு கொடுக்கும் கீரிப்பூச்சி மருந்து என கூறியுள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாய் அனிதா கிராம சுகாதார செவிலியரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, குழந்தைக்கு கொடுக்கும் காய்ச்சல் தடுப்பு மருந்து பெட்டியைத்தான் கொடுத்தேன். அந்த பெட்டிக்குள் மருந்து மாறியிருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
இதன்பேரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கபிலர்மலை வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் சாந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கபிலர்மலை வட்டார மருத்துவமனையில் இருந்து 10 காய்ச்சல் தடுப்பு மருந்து பெட்டிகளை பாண்டமங்கலம் துணை சுகாதார நிலையத்திற்கு வழங்கினோம். அதில் ஒரு பெட்டியில் மட்டும் மருந்து மாறியிருந்தது தெரியவில்லை. ஆனால் கிராம சுகாதார செவிலியர் மருந்துகளை கொடுக்கும்போது மருந்துப்பெட்டியை திறந்து சரியான மருந்து உள்ளதா? என பார்த்து குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என பெற்றோரிடம் விபரமாக கூறி கொடுத்திருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.