சீன அதிபர்-பிரதமர் மோடி வருகை எதிரொலி; மாமல்லபுரத்தில் தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆய்வு

சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி வருகை எதிரொலியாக மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-09-21 23:00 GMT
மாமல்லபுரம்,

சீன பிரதமர் ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி 2 நாள் அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வருகின்றனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 2 நாட்கள் தங்கும் அவர்கள் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கின்றனர்.

இந்த நிலையில் சீன அதிபர்-பிரதமர் மோடி ஆகிய இருவரும் பார்வையிடும் முக்கிய புராதன இடங்கள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர்.

குறிப்பாக மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு அருகில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதேபோல் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டனர்.

கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் கடற்கரை கோவில் உள்பகுதி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோர் அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்