ஸ்ரீவில்லிபுத்தூரில் கதவை உடைத்து துணிகரம்: ராணுவவீரர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2019-09-21 22:15 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள கிருஷ்ணாநகரில் வசித்து வருபவர் ஜெயபால் (வயது 65). முன்னாள் ராணுவவீரர். சென்னையில் இவரது மகன் பிரதீப் வேலை செய்து வருகிறார். பிரதீப்பின் மனைவிக்கு 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க ஜெயபாலும் அவரது மனைவி ஜோதியும் சென்னைக்கு சென்று விட்டனர்.

கடந்த 5 மாதங்களாக, சென்னையில் இருந்துள்ள நிலையில் அவ்வப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்கே செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஜெயபால் வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னையில் வசித்து வரும் ஜெயபால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுதொடர்பாக நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது.

இதைதொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ஏசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ஜெயபாலின் வீட்டை பார்வையிட்டபோது 4 கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.

மேலும் சென்னையிலிருந்து ஜெயபால் வந்த பிறகு தான் வீட்டில் எவ்வளவு நகை வைத்திருந்தார், எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து முழுமையான விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்