ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

13 ஆண்டுகளாக மதுரை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து உள்துறை செயலாளர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-09-21 23:00 GMT
மதுரை,

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தென்கரை கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்தியம்மாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்னுடைய மகன் கந்தசாமி என்ற கபிலன். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது. அவர் கடந்த 13 ஆண்டுகளாக மதுரை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் நன்னடத்தை விதிகளின்கீழ் விடுவிக்கப்படுவர் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எனது மகனையும் விடுவிக்க வேண்டும் என்று அளித்த மனுவை சிறைத்துறை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. சிறையில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத எனது மகனை முன்கூட்டியே விடுவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “தேனி கோர்ட்டுக்கு அழைத்து சென்று திரும்பிய போது மதுரை ஆரப்பாளையத்தில் மனுதாரரின் மகன் கைவிலங்குடன் தப்பினார். இதுகுறித்து மதுரை கரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்தனர். சில நாட்கள் கழித்து அவரை பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர். எனவே அவரது நடத்தையை கருத்தில் கொண்டு, அவரை முன்கூட்டியே விடுவிக்க இயலாது” என்றார்.

இதற்கு மனுதாரர் வக்கீல் டி.திருமுருகன் ஆஜராகி, “மனுதாரர் மகன் மீது அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அந்த வழக்கில் இருந்து அவரை கோர்ட்டு விடுதலை செய்தது. அந்த வழக்கை காரணம் காட்டி, மனுதாரரின் மகனை விடுதலை செய்ய மறுப்பதை ஏற்க முடியாது. கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் நிலுவையில் இல்லை” என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், “போலீசாரிடம் இருந்து தப்பியதாக மனுதாரர் மகன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அவர் மீது மற்ற எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அரசாணையின்படி மனுதாரர் மகனை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் பரிசீலித்து, நடவடிக்கை எடுத்து 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்