கடலூரில் ரூ.9 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
கடலூரில் ரூ.9 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.;
கடலூர்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கரநாற்காலியும், மூலை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசு முதல் முறையாக முதுகு தண்டுவடத்தில் பாதிக்கப்பட்டு கால்கள் மற்றும் கைகள், செயலிழந்து உணர்ச்சியற்ற நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நற்காலி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலா ரூ.75 ஆயிரம் வீதம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 லட்சம் செலவில் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.