விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
விருத்தாசலம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியாங்குப்பம் கிராம மக்கள் நேற்று முன்தினம் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த சப்-கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது பொதுமக்கள் சார்பில் சப்-கலெக்டர் பிரசாந்திடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் எங்கள் ஊரில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அப்பகுதியில் இயங்கிவரும் பள்ளிக்கூடத்துக்கு அருகே புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த நிலையில் பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள இடத்தின் உரிமையாளர், அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதுபற்றி கேட்டால் எங்களை மிரட்டுகிறார். மேலும் அதற்கு கிராம நிர்வாக அலுவலரும் துணை நிற்பதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை அழைத்து விசாரணை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரில் ரேஷன் கடை இல்லாததால், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ரேஷன் கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற சப்-கலெக்டர் பிரசாந்த் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.