தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கோரம்பள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ராஜேஷ் என்ற ராஜேசுவரன் (வயது 29). கோரம்பள்ளம் பி.எஸ்.பி. நகரை சேர்ந்த அந்தோணி பீட்டர் (24), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த விக்னேசுவரன் என்ற விக்னேஷ்குமார் (30), புதுக்கோட்டை குலையன்கரிசலை சேர்ந்த சத்யராஜ் (25), பேரூரணி மெயின் ரோட்டை சேர்ந்த மருதவேல் (27). இவர்கள் 5 பேர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
மேலும் இவர்கள் 5 பேரும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 21.8.2019 அன்று நடந்த சிவக்குமார் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், ராஜேஷ், அந்தோணி பீட்டர், விக்னேசுவரன், சத்யராஜ், மருதவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை நேற்று காலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.