விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் - போலீசார் தீவிர வாகன சோதனை
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.;
விழுப்புரம்,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி இறந்தார். இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானது. இந்த சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேதியை நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில்அரோரா அறிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த நிமிடத்தில் இருந்தே, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து மாவட்டத்தின் பல இடங்களில் ஏற்கனவே அரசியல் கட்சியினரால் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நேற்று மாலையில் இருந்து அரசியல் கட்சியினர் தாங்கள் அமைத்த கட்சி கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் அகற்றாத பட்சத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதுபோல் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டது. தேர்தலை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு நாளை(திங்கட்கிழமை) முதல் செயல்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவித்தார். இருப்பினும் போலீசார் நேற்று மாலையில் இருந்தே விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று மாவட்டத்தில் விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. இவற்றில் விக்கிரவாண்டியில் மட்டும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிவடைந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உடனடியாக நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இதனால் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற இருந்த அரசு விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.