விக்கிரவாண்டியில் 2,375 பேருக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
விக்கிரவாண்டியில் நடந்த விழாவில் 2,375 பேருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதிஉதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதிஉதவி வழங்கும் விழா விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு விக்கிரவாண்டி உள்ளிட்ட 12 ஒன்றியங்களை சேர்ந்த 2,375 பெண்களுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 87 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒரே தமிழக தலைவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயல்படுத்தி காட்டிய ஒரே தலைவரும் அவர் தான்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு வரை 58 ஆயிரத்து 308 பேருக்கு திருமண நிதிஉதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் தாசில்தார் பார்த்திபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எசாலம் பன்னீர், ஒன்றிய செயலாளர்கள் சிந்தாமணிவேலு, முத்தமிழ்ச்செல்வன், நகர செயலாளர்கள் பாஸ்கரன், பூர்ணராவ், கூட்டுறவு சங்க இயக்குனர் பி.கே.எஸ்.சுப்பிரமணி, ரவி.துரைமுருகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் முகுந்தன், லட்சுமி நாராயணன், நாகப்பன், ஆவின் சேர்மன் முருகன், மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா நன்றி கூறினார்.