15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு எடியூரப்பாவுடன், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் திடீர் ஆலோசனை
15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் நேற்று தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று ஆலோசனை நடத்தினார்கள்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 17 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏனெனில், 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி 17 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) தான் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
ஆனால் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். இன்னும் 9 நாட்களுக்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்துள்ள வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூற வாய்ப்பில்லை. இதன் காரணமாக அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் 17 பேரின் அரசியல் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது.
எடியூரப்பாவுடன் ஆலோசனை
இந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எச்.விஸ்வநாத், சுதாகர், சோமசேகர், பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் திடீரென்று சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் எடியூரப்பாவுடன் இருந்தனர்.
அப்போது திடீரென்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டதாகவும், உங்களை (எடியூரப்பாவை) நம்பி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எடியூரப்பாவிடம், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கூறியதாக தெரிகிறது.
பா.ஜனதா மேலிட தலைவர்களிடம்...
அதே நேரத்தில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையின் போது இடைத்தேர்தலில் போட்டியிட தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், தேர்தலில் போட்டியிடுவது தங்களது உரிமை என்பதை வலியுறுத்தி சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சட்ட போராட்டம் நடத்துவது குறித்து எடியூரப்பாவுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூத்த வக்கீல்களை சந்தித்து பேசுவதற்கு, இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவதற்கு கண்டிப்பாக டிக்கெட் வழங்கப்படும் என்றும், ஒரு வேலை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் உங்களது குடும்பத்தினருக்கு (தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள்) வாய்ப்பளிக்கப்படும் என்றும், அதுகுறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் பேசுவதாகவும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களிடம் எடியூரப்பா உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
நியாயம் கிடைக்கும்
முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான சோமசேகர் நிருபர்களிடம் கூறுகையில், “இடைத்தேர்தல் இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்றாலும், இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்தும், 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சபாநாயகர் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை 23-ந் தேதி(அதாவது நாளை) நடக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதால், இடைத்தேர்தல் நடத்த கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். அப்படி இருந்தும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் 23-ந் தேதி நடைபெறும் விசாரணைக்கு பின்பு அடுத்தகட்ட முடிவு எடுப்போம். வேட்பு மனு தாக்கலுக்கு 30-ந் தேதி தான் கடைசி நாளாகும். அதற்குள் சுப்ரீம் கோர்ட்டு மூலம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்,“ என்றார்.