சபாநாயகர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பேட்டி

தேர்தலில் போட்டியிடுவதற்கு சபாநாயகர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதால், 15 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-21 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நடத்தை விதிமுறைகள் அமல்

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அரசாணை வருகிற 23-ந் தேதி பிறப்பிக்கப்படுகிறது. அன்றைய தினமே வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 1-ந் தேதி வேட்பு மனுக்களின் பரிசீலனையும், 3-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். 24-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும். இடைத்தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள எந்த விதமான தடையும் இல்லை.

போட்டியிட முடியாது

மாநிலத்தில் 17 தொகுதிகள் காலியாக உள்ளது. அதில், சட்டசபை தேர்தலில் ராஜராஜேஸ்வரிநகர், மாஸ்கி தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருவதால் ராஜராஜேஸ்வரிநகர் மற்றும் மாஸ்கி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் சபாநாயகர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதனால் இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் போட்டியிட முடியாது. சபாநாயகரின் உத்தரவுக்கு தடை கேட்டு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறவில்லை. இதுபோன்ற காரணங்களால் இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் போட்டியிட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்