கோபி அருகே பரிதாபம்; மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் சாவு

கோபி அருகே மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-09-21 22:45 GMT
டி.என்.பாளையம்,

கோபி கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் சின்னகாளியூரை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மகன் ரஞ்சித் என்கிற தங்கராஜ் (வயது 30). வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் ரமேஷ் (35). இவர் மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைசெய்து வந்தார்.

தங்கராஜும், ரமேசும் நண்பர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கணக்கம்பாளையத்தில் இருந்து கள்ளிப்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை தங்கராஜ் ஓட்ட, ரமேஷ் பின்னால் உட்கார்ந்து இருந்தார். கள்ளிப்பட்டியில் சென்றபோது திடீரென மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரமேஷ் பலத்தகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த 2 பேருக்கும் திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்