நாலச்சோப்ராவில் பட்டப்பகலில் துணிகரம் துப்பாக்கி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை மிரட்டி நகை, பணம் கொள்ளை முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு
நாலச்சோப்ராவில் துப்பாக்கி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை மிரட்டி நகை, பணம் கொள்ளை அடித்த முகமூடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் கோல்ட் லோன் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தங்கநகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிறுவனத்துக்குள் முகமூடி அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.
பின்னர் அந்த கும்பலினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி, வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி நிறுவனத்தில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.
கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு
இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளை கும்பலை வலைவீசி தேடிவருகின்ற னர்.
பட்டப்பகலில் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.