பெங்களூருவில் பரபரப்பு அடுக்குமாடி வீட்டில் மர்மபொருள் வெடித்து தொழிலாளி படுகாயம் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா? என போலீஸ் விசாரணை

பெங்களூருவில் அடுக்குமாடி வீட்டில் மர்மபொருள் வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.;

Update:2019-09-21 04:21 IST
பெங்களூரு,

பெங்களூரு சிக்கஜாலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர், தனக்கு சொந்தமான 3 மாடிகளை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் முதல் மாடியில் பவன் குமார் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர், கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் மேலும் சில தொழிலாளிகளும் அந்த வீட்டில் வசிக்கின்றனர்.

நேற்று காலை 8 மணியளவில் பவன்குமார் சமையல் செய்ய முயன்றார். அப்போது திடீரென்று அவரது வீட்டில் மர்மபொருள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. மேலும் வீட்டில் தீப்பிடித்தது. அத்துடன் மர்மபொருள் வெடித்து சிதறியதில், வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து நொறுங்கின. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கட்டிட சுவர்களில் விரிசல் உண்டானது.

தொழிலாளி படுகாயம்

அதே நேரத்தில் வீட்டில் பிடித்த தீ, பவன்குமார் மீதும் பிடித்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். வெடிகுண்டு போல மர்மபொருள் வெடித்ததால், பலத்த சத்தம் கேட்டது. இதை கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள், பவன்குமார் மீது பிடித்து எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டனர். இதுபற்றி அறிந்ததும் சிக்கஜாலா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் தீயணைப்பு படைவீரர்களும் விரைந்து வந்து வீட்டில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த பவன்குமார் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா?

இதற்கிடையில், பவன்குமார் வீட்டில் வெடித்த பொருள் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருந்தது. இதனால் கசிவு ஏற்பட்டு கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் பவன்குமார் கல்குவாரியில் வேலை செய்வதால், அங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்க பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்களை வைத்திருக்கலாம் என்றும், அந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

அதுகுறித்து தடயவியல் நிபுணர்கள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சிக்கஜாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்