வறட்சி மாவட்டமாக 2 முறை அறிவித்தும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை - குறைதீர்வு கூட்டத்தில் புகார்

வேலூரை 2 முறை வறட்சி மாவட்டமாக அறிவித்தும், வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2019-09-20 22:30 GMT
வேலூர், 

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (பொறுப்பு) திருகுணஅய்யப்பதுரை, வேளாண் மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப்தீட்சித் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது விவசாயிகள் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெறுவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் இதில் மக்கள் பங்களிப்பு இல்லாமல் அனைத்து பணிகளும் எந்திரங்கள் மூலமே நடக்கிறது. வாணியம்பாடி கல்லாற்றில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் 70 அடிக்குமேல் அகலமாக இருந்த ஆறு தற்போது 20 அடிகூட இல்லை.

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டது. தற்போது விவசாய பணிக்கு ரூ.1 லட்சம் போதாது என்பதால் ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோன்று விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் இருப்பு குறித்து அறிவிப்பு பலகை வைக்கவேண்டும்.

வேளாண்மைத்துறையில் உள்ள என்ஜினீயரிங் பிரிவில் விவசாயிகளுக்கு என்னென்ன எந்திரங்கள் வழங்கப்படுகிறது என்ற விவரம் கேட்டால் தெரிவிப்பதில்லை. கிருஷ்ணம்பள்ளியில் குட்டையின் கரையை உடைத்து தடுப்பணை கட்டி உள்ளனர். விவசாயிகள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது 6 மாதங்களாகியும் பதில் தெரிவிப்பதில்லை.

வனவிலங்குகள் மற்றும் யானையால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சோலார் மின்வேலி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் ஒரு வருடமாகியும் விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

அதேபோன்று மத்திய அரசு விவசாயிகளுக்கு 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. ஊசூர் அம்மாகுளம் கரையை ஆக்கிரமித்து பலர் வீடுகட்டி உள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஊசூர் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும்.

வேலூர் 2 முறை வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டும் இதுவரை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கான மானியமும் கிடைக்கவில்லை. பொன்னையாற்றில் பொன்னேரி பகுதியில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தடுப்பணை கட்டப்படவில்லை. மேல்பாடி கால்வாய் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. திருப்பத்தூரில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு அதிகாரிகள் யாரும் வருவதில்லை. இதனால் அலுவலகத்தை சமூகவிரோதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதிலளித்த கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

தடுப்பணைகள் கட்டும்போது விவசாயிகளிடம் கருத்து கேட்டு கட்டப்பட வேண்டும். எங்கெங்கு தடுப்பணை வேண்டுமோ அதை மனுவாக கொடுங்கள். தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும்.

வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு குடிமராமத்து பணிகளுக்கு 220 ஏரிகள், 460 கண்மாய்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. தண்ணீர் இருக்கும் பகுதியை விட தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் பகுதிகளில் குடிமராமத்து பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே மனுவாக கொடுத்தால் அதை பரிசீலனை செய்து குடிமராமத்து பணிகள் செய்யப்படும்.

மத்திய அரசு உதவி திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுபட்ட விவசாயிகள் தங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.7½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

முன்னதாக ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க அதிகாரிகள், விவசாயிகள் திரும்பக்கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்