கொத்தமங்கலத்தில் வேரோடு தோண்டி மாற்றுஇடத்தில் நடப்பட்ட மரம்

கொத்தமங்கலத்தில் 5 ஆண்டுகளாக வளர்த்து வந்த மரத்தை வீடு விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால் வெட்டி வீசாமல் வேரோடு தோண்டி மாற்று இடத்தில் நட்டு, அந்த வீட்டின் உரிமையாளர் வளர்த்து வருகிறார்.

Update: 2019-09-20 22:15 GMT
கீரமங்கலம், 

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). தனது வீட்டு வாசலில் மரங்கள், பூ கன்றுகளை வளர்த்து வருகிறார். வீட்டின் மேல் கூரையில் இருந்து வரும் மழை தண்ணீரை பெரிய தொட்டியில் சேமித்து குடிக்கவும், வீட்டு தேவைகளுக்கும் பயன்படுத்துவதுடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மரங்கள், செடிகளையும் வளர்த்து வருகிறார். இவரது இந்த மழைநீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் சிக்கனத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து பாராட்டியதுடன், குடியரசு தினத்தில் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி பாராட்டி சான்றிதழும் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் தனது வீட்டின் முன்பு தாழ்வாரம் அமைத்து விரிவு செய்ய திட்டமிட்டார். ஆனால் வீட்டு வாசலில் நின்ற சாத்துகுடி மரம் விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் தாழ்வாரம் விரிவாக்கம் செய்ய வந்தவர்கள் மரத்தை வெட்டி அகற்றிவிட்டு கொட்டகை கால் நடலாம் என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு சம்மதிக்காத வீரமணி. 5 ஆண்டுகள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்த மரத்தை வெட்டி அழிக்க முடியாது.

இதனால் மரத்தை வேரோடு தோண்டி மாற்று இடத்தில் நட்டு விடுகிறேன் என்று சொன்னதுடன், மரத்தை தோண்டி எடுக்க பொக்லைன் எந்திரத்தை நாடினார். ஆனால் எந்திரம் கிடைக்கவில்லை. இதனால் மரத்தை சுற்றி மண்ணை அள்ளிவிட்டு தண்ணீரை ஊற்றிக் கொண்டே மரத்தில் மரக்கம்புகளை கட்டி ஜாக்கி வைத்து ஏற்றிய போது ஈரத்தோடு மரத்தின் வேர்கள் பாதிப்பு இல்லாமல் அப்படியே வெளியே வந்தது.

அப்பகுதி இளைஞர்கள் சிலரின் உதவியுடன் வேரோடு தோண்டப்பட்ட சாத்துக்குடி மரத்தை மாற்று இடத்தில் தயாராக வெட்டப்பட்டு இருந்த குழியில் நட்டு தண்ணீர் ஊற்றினார்கள். சில நாட்கள் கடந்தாலும் மரத்தின் இலைகள்கூட வாடவில்லை. எளிய முறையில் ஒரு மரத்தை வேரோடு இடம் மாற்றம் செய்திருப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்