ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் - நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-09-20 22:30 GMT
ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஆண்டறிக்கையை பொது செயலாளர் முத்துக்குமரன் வாசித்தார். கூட்டத்தில் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும். பழுவனேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருச்சி- சிதம்பரம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். நகரின் வெளிப்புறத்தில் நவீன முறையில் புதிதாக மீன் மார்க்கெட்டை கட்டிக்கொடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்வது.

ஜெயங்கொண்டம் நகரில் காந்தி பூங்கா, செங்குந்தபுரம் அண்ணா பூங்கா ஆகியவற்றை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்வது. வாரச்சந்தையில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிப்பிட வசதி எதுவும் இல்லாமல் வாரச்சந்தை இயங்கி வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு நகருக்கு வெளியே வாரச்சந்தை கட்டிடம் கட்டி பொதுமக்கள் உபயோகத்திற்கு கொடுக்குமாறு நகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்வது. சிவன் கோவில் தெப்பக்குளம் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளை காலி செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும். நகராட்சி குப்பை தொட்டிகள் பெரும்பாலும் சேதமடைந்து கொட்டப்படும் குப்பைகள் உள்ளே தங்காமல் வீதியில் விழுந்து, பரவி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமாள் கோவில் அருகில் உள்ள ஆலமரத்தின் அருகில் புதியதாக பூங்கா அமைக்க வேண்டும் என உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலரை கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பாரிவள்ளல், ராஜமாணிக்கம், மாரிமுத்து, தங்கவேல், செந்தமிழ்ச்செல்வன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் முகமது சுல்தான் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்