தேவாரத்தில், கள்ளக்காதலியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தேவாரத்தில் கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.;

Update: 2019-09-20 22:00 GMT
தேனி,

தேனி மாவட்டம், தேவாரம் ரோட்டுப்பட்டியை சேர்ந்த விஜயன் மகள் ரதிமாலா (வயது 31). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சக்திபாண்டி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

பின்னர், ரதிமாலா ரோட்டுப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில், தேவாரத்தை சேர்ந்த சாந்தகுமார் (39) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது ரதிமாலாவுக்கும், சாந்தகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி ரதிமாலாவை காணவில்லை என்று அவருடைய தந்தை விஜயன் தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் ரதிமாலா அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். இதனால், சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கை மாற்றினர். விசாரணையில், அவரை சாந்தகுமார் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, சாந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த கொலை வழக்கில் சாந்தகுமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து சாந்தகுமாரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்