ஊட்டியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஊட்டியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ஊட்டி,
ஊட்டி மார்க்கெட் பகுதியில் நகராட்சி நடைபாதையை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக கடைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதுதவிர அரசுக்கு சொந்தமான மகளிர் பிரசவ ஆஸ்பத்திரி, அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலையம் உள்பட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது.
இதனால் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் புகார்கள் வரப்பெற்றது. இதைத்தொடர்ந்து ஊட்டி நகரில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட கடைகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையொட்டி கடந்த 2 தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மத்திய பஸ் நிலையம் முன்பு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 7 கடைகளை அகற்றினர்.
நேற்று நகராட்சி திட்ட அமைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் வருவாய் அலுவலர் பாஸ்கரன், உதவி வருவாய் அலுவலர் லூயிஸ் உள்பட நகராட்சி ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊட்டி மார்க்கெட் பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும் முன்ஏற்பாடாக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதை நகராட்சி அதிகாரிகள் கண்டனர். பின்னர் அந்த கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
இதனால் சில கடை உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த சமயத்தில் ஒரு கடைக்காரர் தனது கடையை அகற்ற முடியாது என மறுத்து விட்டார். இதனால் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்த கடையை நகராட்சி அதிகாரிகள் உடைத்து அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மார்க்கெட்டுக்குள் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது பெரும்பாலான கடைகளுக்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
இதனால் அந்த மேற்கூரைகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து சிலர் தங்களது கடைகளுக்கு முன்பு அமைத்து இருந்த மேற்கூரைகளை உடனடியாக அகற்றினர். மேலும் மார்க்கெட்டுக்குள் தனியார் வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது. அவ்வாறு மீறி வாகனங்களை கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.