வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தேர்வு: ரெயில்வே தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்

ரெயில்வே தேர்வில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தேர்வாகி உள்ளனர். ஆகவே இந்த தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கடலூரில் வேல்முருகன் கூறினார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று கடலூர் முதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-09-20 23:00 GMT
கடலூர் முதுநகர்,

மதுரை மற்றும் திருச்சியில் நடந்த ரெயில்வே தேர்வில் 90 சதவீதம் பேர், வடமாநிலத்தை சேர்ந்தவர்களே தேர்வாகி உள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்வாகினர். ஆகவே இந்த தேர்வுகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தென்னக ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

இதேபோல் வங்கி பணிக்கு வடமாநிலத்தை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகி உள்ளனர். வருமான வரி துறையிலும் வடமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வாகி உள்ளனர். நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திலும், பரங்கிப்பேட்டையில் உள்ள மின் ஆலையிலும், கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலைகளிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநிலத்தை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 1 கோடி இளைஞர்கள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் என்ன பதில் சொல்ல போகிறது. தமிழக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

மேலும் செய்திகள்