மார்த்தாண்டம் பகுதியில் 52 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் பகுதியில் 52 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை,
கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் பகுதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பம்மத்தில் மகேஷ்குமார் என்பவர் 41 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவற்றை விழாக்களுக்கு வாடகைக்கு விடுவதும் தெரியவந்தது. உடனே, போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மகேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், ஞாறான்விளை பகுதியில் சென்றபோது, ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் 7 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் இருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுதொடர்பாக அண்டுகோட்டை சேர்ந்த ஜெயராஜ் (வயது 55) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பேரை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் 4 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்து, கோவில் நிர்வாகி தோமஸ்(46) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 52 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.