மரக்காத்தூர் கண்மாய் மதகு உடைந்ததால் வீணாகிய மழை நீர்; அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மரக்காத்தூர் கண்மாய் மதகு உடைந்ததால், கண்மாயில் தேங்கியிருந்த மழைநீர் முழுவதும் வீணாகியது. இதற்கு காரணமான அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2019-09-20 23:00 GMT
காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது மரக்காத்தூர்கிராமம். இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 35 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த 2 மாதங்களாக பணிகள் நடந்தன. 3 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள இந்த கண்மாயில் இருந்து மரக்காத்தூர், மாத்தூர் மற்றும் செவந்தரேந்தல் கிராம விவசாயிகள் பயனடைந்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையின்றி விவசாயம் பாதித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் கண்மாயில் பாதி அளவு நீர் நிரம்பி காணப்பட்டது.

இந்தநிலையில் குடிமராமத்து பணி மேற்கொண்ட போது, இங்குள்ள மதகு அணையை உரிய முறையில் சீரமைக்கப்படாததால், நேற்றுமுன்தினம் இரவு மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் வயலில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் விவசாய பணி நடைபெற வாய்ப்பில்லை. குடிமராமத்து பணி உள்ளூர் விவசாய சங்கங்களுக்கு வழங்காமல் அரசு அதிகாரிகள் செயல்பட்டதாலும், மதகு அமைப்பதில் முறையான விதிமுறைகள் பின்பற்றாததால், தற்போது மதகில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் முழுவதும் வீணாகி உள்ளது என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் அதிக அளவு செலவு செய்திருந்த விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உடனே மதகு அணையை சீரமைக்க வேண்டும் என்றும் மெத்தனம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சிவகங்கை கோட்டாட்சியர் செந்தில் குமாரி, காளையார்கோவில் தாசில்தார் சேது நம்பு, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர்கள் கண்ணன், முத்துராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடைந்த மதகு அணையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர் அமைப்பதாக கூறியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்