பொள்ளாச்சி வனப்பகுதியில் சம்பவம்: இறந்த குட்டியின் உடலை தூக்கிச்சுமந்த பெண் யானை
பொள்ளாச்சி வனப்பகுதியில் குட்டி யானை இறந்தது தெரியாமல் துதிக்கையால் தூக்கி சுமந்தபடி பெண் யானை சுற்றி திரிந்தது. 3 மணி நேர பாச போராட்டத்துக்கு பிறகு குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பொள்ளாச்சி,
விலைமதிப்பில்லாத தாய்பாசம் விலங்கினைத்தையும் விட்டுவைப்பதில்லை. அதிலும் யானைகளிடத்தில் தாய்பாசத்துக்கு அளவில்லை என்பதை வனத்தில் நடைபெறும் பல சம்பவங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதுபோன்றுதான் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் யானை, மான், காட்டெருமை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கலகுறிச்சி அருகே தாடகை நாச்சியம்மன் கோவில் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது யானைகள் சத்தம் அதிகமாக கேட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் வனச்சரகர் காசிலிங்கம், கால்நடைத்துறை உதவி இயக்குனர் திருக்குமரன், வனவர் பிரபாகரன், வனக்காப்பாளர் சபரிநாதன் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்றனர். குட்டியின் உடலை சுற்றி யானை கூட்டம் நின்றதால் அதன் அருகே செல்ல முடிய வில்லை. சுமார் 3 மணி நேர பாச போராட்டத்துக்கு பிறகு குட்டியின் உடலை விட்டு யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகு குட்டியானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. இதையடுத்து அந்த குட்டியானையின் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே போடப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வனப்பகுதியில் கோபால்சாமி மலை பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான பெண் யானை சுற்றி திரிந்தது. இந்த யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதற்கிடையில் நேற்று (நேற்றுமுன்தினம்) மாலையில் யானைகள் கூட்டமாக நின்று சத்தம் போட்டன.
இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது. அதை சுற்றியும் பெண் யானை உள்பட யானைகள் நின்றிருந்தன. குறை பிரசவத்தில் பிறந்ததால் குட்டி யானை இறந்தது தெரியவந்தது. இதற்கிடையில் பெண் யானை கண்ணீர் சிந்தியபடி துதிக்கையால் குட்டி யானையை தடவி கொடுத்தது.
பின்னர் பெண் யானை துதிக்கையால் குட்டியின் உடலை தூக்கி சுமந்து கொண்டு அந்த பகுதியை சுற்றி வந்தது. மற்ற யானைகள் பெண் யானைக்கு பாதுகாப்பாக நாலாபுறமும் சுற்றி நின்று கொண்டிருந்தன.
சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் குட்டியின் உடலை போட்டு விட்டு கண்ணீருடன் பெண் யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிந்தது. வனப்பகுதிக்குள் சென்ற பெண் யானை, குட்டியை தேடி திரும்ப அதே பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார் கள்.