சட்டக் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை மாணவர் கைது

சட்டக்கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-19 22:31 GMT
மும்பை,

நாக்பூரை சேர்ந்த ஹிமாலய் தேவ்கடே (வயது21) என்ற மாணவர் மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியில் தங்கியிருந்து சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் மாணவியை பின் தொடர்ந்து சென்று அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

கடந்த ஜூன் மாதம் அவர் தனது காதலை வெளிப்படுத்தி மாணவியிடம் திருமணத்துக்கு சம்மதம் கேட்டார். இதை கேட்டு அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். மேலும் மாணவரை திருமணம் செய்யவும் அவர் மறுத்து விட்டார்.

மாணவர் கைது

இந்தநிலையில், ஹிமாலய் தேவ்கடே மாணவியின் உறவினர்களை சந்தித்து இருவரும் காதலிப்பதாக கூறியுள்ளார். அண்மையில் அவர் மாணவி தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும்படி கேட்டு உள்ளார். சம்மதிக்க வில்லை என்றால், மாணவியின் ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சம்பவம் குறித்து மெரின்டிரைவ் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமாலய் தேவ்கடேவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்