சாலையில் பள்ளங்களை மூடிய போலீசார் - கவர்னர் கிரண்பெடி பாராட்டு
சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளங்களை மணல் போட்டு நிரப்பிய போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி பாராட்டு தெரிவித்தார்.;
புதுச்சேரி,
புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே சிறியதும், பெரியதுமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த பள்ளங்களில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். அதேபோல் ஆரியபாளையம் ரோட்டிலும் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதில் சிக்கி நேற்று ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்தநிலையில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ஆரியபாளையம், உறுவையாறு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை கற்கள், மணலை கொட்டி நிரப்பி சரிசெய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கவர்னர் கிரண்பெடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவதன் மூலம் பல விபத்துகளை தடுக்கலாம். போலீசார் இதுபோன்ற பள்ளங்களை மூடி உள்ளனர். இதற்கு பொதுமக்களும் உதவலாம்.
இதுபோன்ற பள்ளங்கள் இருந்தால் அதை புறக்கணிக்கவேண்டாம். அவற்றை மூடினால் பல முதல் தகவல் அறிக்கை, விசாரணை, மருத்துவ அறிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து நேரத்தை சேமிக்கலாம். இது நமது கடமை.
தற்போது பேனர்கள் அரசின் பல்வேறு துறைகள் மூலம் அகற்றப்படுகின்றன. அதற்கு காவல்துறையினர் உதவிட வேண்டும். இதில் ஒரு நாளைக்கூட இழக்கக்கூடாது. மழைபெய்யும்போது சாலையில் பள்ளங்களின் எண்ணிக்கை உயரும். விழிப்புடன் இருப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். தொடர்ந்து இதை அறிவுறுத்த வேண்டும்.
பொதுமக்கள் பேனர் தொடர்பான புகார்களை 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இதில் உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறைக்கு நான் எனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன். சாலையில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்தினை தடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.