ராஷ்டிரிய போஷன் அபியான் திட்டம் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில், ராஷ்டிரிய போஷன் அபியான் திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-09-19 22:00 GMT
காரைக்கால், 

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், பிரதம மந்திரியின் ராஷ்டிரிய போஷன் அபியான் எனும் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு மாத காலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி சத்யா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, “பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும், 6 வயது வரை குழந்தைக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும், கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும், பள்ளி செல்லும் சிறுவர்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்” என்பவை உள்ளிட்டவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், நலவழித் துறை, வட்டார வளர்ச்சித்துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தினார். முடிவில், சத்தான உணவை எடுத்துக் கொள்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில், துணை ஆட்சியர் பாஸ்கரன், காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி அல்லி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்