ஆரணியில் பால் கூட்டுறவு சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகை
ஆரணியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
ஆரணி, ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவில் ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று மெய்யூர் கிராமத்தை சேர்ந்த மாடு உரிமையாளர்களும், சங்க உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வாராந்திர பட்டுவாடா பணம் வழங்கப்படவில்லை எனவும், அரசு வழங்க உத்தரவிட்ட கொள்முதல் தொகையைவிட குறைவாக வழங்குவதை கண்டித்தும் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சங்க செயலாளர் சந்தோஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் சங்க செயலாளர் சந்தோஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆரணி சுற்று வட்டாரங்களில் 30 இடங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 6 ஆயிரத்து 500 லிட்டர் பால் குளிரூட்டப்பட்டு வேலூர், சென்னை அம்பத்தூர் ஆவின் நிறுவனத்திற்கு அனுப்புவது போக மீதமுள்ள பாலை சில்லறையில் விற்பனை செய்யப்படுகிறது.
மெய்யூர் கிராமத்தில் 89 சங்க உறுப்பினர்கள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு 760 முதல் 800 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வாரந்தோறும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
கடந்த காலங்களில் கொள்முதல் விலையாக ரூ.26 வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.29 வழங்கப்படுகிறது. ஆவினில் தெரிவித்துள்ள அறிக்கையின்படி உபரியாக வந்தால் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்ட 1 ரூபாயை நிலுவையாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.