அரூர்-நல்லம்பள்ளியில் புதிய தாலுகா அலுவலக கட்டிடங்கள் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
அரூர் மற்றும் நல்லம்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூரில் ரூ.2.34 கோடி மதிப்பிலும், நல்லம்பள்ளியில் ரூ.2.62 கோடி மதிப்பிலும் தாலுகா அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த புதிய அலுவலக கட்டிடங்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையொட்டி அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த அலுவலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் தாசில்தார் அறையும், முதல் தளத்தில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம், ஆதி திராவிடர் நல தாசில்தார் அலுவலகம், கூட்ட அறை, பதிவறை உள்ளிட்ட பல்வேறு அலுவலக அறைகள் அனைத்து வசதிகளுடன் கூடியதாக கட்டப்பட்டு உள்ளன. அரூரில் நடந்த விழாவில் வே.சம்பத்குமார் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தாசில்தார் செல்வகுமார், அரசு வக்கீல் பசுபதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், கூட்டுறவு சங்கத் தலைவர் மதிவாணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஐ.கே.முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், சரோஜாதேவி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் புதிய தாலுகா அலுவலக கட்டிட திறப்பு விழாவையொட்டி நல்லம்பள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், உதவி கலெக்டர் சிவன் அருள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்கள். தாசில்தார் சவுகத்அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழித்தேவன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
விழாவில் முன்னாள் ஒன்றியகுழு தலைவர் பூக்கடை முனுசாமி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் சிவப்பிரகாசம், அங்குராஜ், பெரியண்ணன், தர்மலிங்கம், ஜெயக்குமார், அருவி, அம்மாசி, முனியன், ஊராட்சி செயலர் செல்வம், பாசறை நிர்வாகி திருமால்வர்மா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.