நொகனூர் காப்புக்காட்டில் முயல் வேட்டையாடிய 2 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புக்காட்டில் முயல் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்புக்காட்டில் மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 2 பேர் முயல்களை வேட்டையாடிவிட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அந்தேவனப்பள்ளியை சேர்ந்த முரளி (வயது 27), ஏணிபண்டா கிராமத்தை சேர்ந்த சின்னபையன் என்கிற சின்னசாமி (33) என்பதும், முயல்களை வேட்டையாடி கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதே போல அஞ்செட்டி வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர் பனைகிழக்கு காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். வனத்துறையினரை பார்த்த உடன் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு நபரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் அவர், பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் (61) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பி ஓடிய அருணாசலத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.