ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஒத்துழைப்பு தர வேண்டும் - கலெக்டர் பேச்சு

ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.;

Update: 2019-09-19 22:30 GMT
அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகாவில் வட்டார வேளாண்மை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழு பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம் தேசியநெடுஞ்சாலை அருகே இயங்கி வருகிறது. இந்த குழுவில் விவசாயிகள் பயிரிடப்படும் எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்து மரச்செக்கு மூலம் அரைத்து சுத்தமான எண்ணெய் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த குழுவிற்கு வெங்கடேசன் தலைவராகவும், செயலாளராக பிச்சாண்டி, பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி உள்ளனர்.

இந்த நிலையில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் எண்ணெய் தயாரிக்கும் இடத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எண்ணெய் உற்பத்தி செய்யும் செக்கு எந்திரங்களையும், எண்ணெய் எடுக்கும் முறையையும் பார்வையிட்டார்.

பின்னர் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் வெங்கடேசனிடம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது எண்ணெய் ஸ்டால் அமைக்கவேண்டும். குறைதீர்வு கூட்டத்திற்கு வருபவர்கள் நீங்கள் உற்பத்தி செய்யும் எண்ணெய்யை வாங்கி செல்வார்கள். அதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இந்த எண்ணெய்யை பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

பின்னர் மரச்செக்கில் தயாரித்த சுத்தமான கடலை எண்ணெய்யை கலெக்டர் பணம் கொடுத்து வாங்கினார்.

ஆய்வின்போது அணைக் கட்டு தாசில்தார் பெருமாள். அணைக்கட்டு வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து விரிஞ்சிபுரத்தில் செயல்படும் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை தாங்கி அங்கு அமைத்திருந்த விவசாய கண்காட்சியை பார்வையிட்டார். 500-கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் போது ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரப்படும், மாவட்டத்தில் நீர் பிரச்சினையே இருக்கக்கூடாது. மழைநீர் சேமிப்பை கட்டாயம் உருவாக்க வேண்டும் வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டி அவசியம் இருக்க வேண்டும். மரங்களை அதிகமாக நட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து 30 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களும், கூட்டத்தில் கலந்து கொண்ட 500 விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் செய்திகள்