ஜல்லிக்கட்டு போராட்டத்தை தூண்டியதாக வழக்கு: மதுரை கோர்ட்டில் முகிலன் உள்பட 3 பேர் ஆஜர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட கோர்ட்டில் முகிலன் உள்பட 3 பேர் நேற்று ஆஜரானார்கள்.
மதுரை,
கடந்த 2017-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன. மதுரையில் தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலன் உள்பட பலர் பங்கேற்றனர். மதுரையில் இந்த போராட்டத்தை தூண்டியதாக 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கார்த்திகா, சபீர், முகிலன், இருளப்பன், செந்தில்பிரபு ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது ஏற்கனவே 58 பேர் ஆஜராகிவிட்டனர். மீதமுள்ள 6 பேரை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் பல மாதங்களாக காணாமல் போய், திருப்பதியில் கண்டு பிடிக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவர் தொடர்பான ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு மதுரை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி சிறையில் இருந்த முகிலன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு, வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதேபோல சபீர், செந்தில்பிரபு ஆகியோரும் ஆஜரானார்கள். மீதமுள்ள 3 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். கார்த்திகா, இருளப்பன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் அவர்களும் வருகிற 16-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு பத்மநாபன் உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு தள்ளிவைத்தார்.
பின்னர் முகிலனை கோர்ட்டுக்கு வெளியில் இருந்த வாகனத்தில் ஏற்றுவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர், இந்தி திணிப்பு குறித்து பேசிய மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம். நாட்டை அழிக்கும் நோக்கத்தில் கால்நடை இனப்பெருக்க சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழக அரசு தட்டிக்கேட்க மறுக்கிறது என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போலீஸ் வாகனத்தில் ஏறினார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் கோஷங்களை எழுப்பினர்.