பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம்: அதிகாரிகளுக்கு அரசு முதன்மை செயலாளர் அறிவுரை
பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு முதன்மை செயலாளர் அறிவுரை கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம்) கோபால் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டப்பணிகள் மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் குறித்தும், மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளின் செயல்பாடுகளை துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் நிலவும் பொதுமக்களின் அடிப்படை தேவை மற்றும் குடிநீர் பிரச்சினை குறித்தும் ஆய்வு செய்து அதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பொதுமக்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன் உள்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.