தென்திருப்பேரையில் கால்வாயில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பலி
தென்திருப்பேரையில் கால்வாயில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பலியானார்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை புளியமர தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜா. இவருடைய மனைவி பால்கனி. இவர்களுடைய மகன் ரமேஷ் (வயது 32).
பி.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ரமேஷ், குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவில் வேடம் அணிவதற்காக விரதம் இருந்து வந்தார். இதற்காக அவர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர், குலசேகரன்பட்டினம் கோவிலில் சென்று துளசிமாலை அணிந்து வந்தார்.
பின்னர் நேற்று காலையில் ரமேஷ், தென்திருப்பேரை மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆத்தூரான் கால்வாயில் குளிக்க சென்றார். அப்போது அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கால்வாயில் குளிக்க சென்ற ரமேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரை தேடி குடும்பத்தினர் சென்றனர். அப்போது ரமேஷ், கால்வாயில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கால்வாயில் மூழ்கி இறந்த ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்வாயில் மூழ்கி பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.