தூத்துக்குடியில் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: 1,500 லாரிகள் ஓடவில்லை

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 லாரிகள் ஓடவில்லை.

Update: 2019-09-19 22:30 GMT
தூத்துக்குடி,

மத்திய அரசு சமீபத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகையை உயர்த்தியது. இதனை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 லாரிகள் உள்ளன. தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் 500 லாரிகள் உள்ளன. இது தவிர வெளியூர்களில் இருந்து தினமும் 1000 லாரிகள் வந்து செல்கின்றன. நேற்று வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வெளியூர்களில் இருந்து கடைகளுக்கு சரக்கு ஏற்றி வந்த லாரிகள் வழக்கம் போல் சரக்குகளை இறக்கி சென்றன.

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களின் லாரிகள் வழக்கம் போல் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி சென்றன. இதனால் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கப்பல்களில் இருந்து வழக்கம் போல் சரக்குகள் இறக்கி கொண்டு செல்லப்பட்டன.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட லாரி புக்கிங் ஏஜென்டு சங்க தலைவர் சுப்புராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக பல தொழிற்சாலைகள் முடங்கி விட்டன. இதனால் லாரிகளுக்கு போதுமான சரக்குகள் கிடைக்காமல் இருந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 1000 லாரிகளில் சுமார் 500 லாரிகள்தான் முழுவீச்சில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் அபராதத் தொகையை உயர்த்தி இருப்பதால், ஓட்டுனர்கள் சிறு தவறு செய்தாலும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். ஆகையால் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. மாவட்டத்துக்கு தினமும் சுமார் 1000 லாரிகள் வெளியூரில் இருந்து வந்து செல்கின்றன. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வெளியூர் மற்றும் உள்ளூரை சேர்ந்த சுமார் 1,500 லாரிகள் வரை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை சேர்ந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

மேலும் செய்திகள்