மூடிகெரே தாலுகாவில் மழை பாதிப்பு பகுதிகளை மந்திரி ஆர்.அசோக் பார்வையிட்டார்
மூடிகெரே தாலுகாவில் மழை பாதிப்பு பகுதிகளை மந்திரி ஆர்.அசோக் பார்வையிட்டார். மேலும் முகாமில் தங்கி உள்ள மக்களுடன் சேர்ந்து அவர் மதிய உணவும் சாப்பிட்டார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொட்டித்தீர்த்த தென்மேற்கு பருவமழையால், மூடிகெரே தாலுகாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த தாலுகாவில் உள்ள பிதரஹள்ளி, மலைமனே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மீது மண்சரிந்து விழுந்தன. வீடுகளை இழந்த மக்கள் பிரதஹள்ளியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மூடிகெரே தாலுகாவில் மழையால் பாதித்த பகுதிகளை கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பிதரஹள்ளியில் உள்ள முகாம்களில் தங்கி உள்ள மக்களிடம் மந்திரி ஆர்.அசோக் குறைகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் முகாம்களில் தங்கி உள்ள மக்களுடன் சேர்ந்து மந்திரி ஆர்.அசோக் மதிய உணவும் சாப்பிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரூ.36 கோடி
முகாம்களில் தங்கி உள்ள மக்களை யாரும் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லாதீர்கள். அந்த மக்களுக்கு பாதுகாப்பாக அரசு உள்ளது. நான் முகாமில் தங்கி உள்ள மக்களிடம் தரமான உணவு கிடைக்கிறதா, உங்களுக்கு எதுவும் குறைகள் உள்ளதா என்று கேட்டேன். அவர்களும் தங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்ட முதல்கட்டமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மழையால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காசோலையாக நிவாரணம் வழங்காமல், அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் சிக்கமகளூருவில் 374 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி உள்ளது. அதில் வீடு கட்ட விரும்புபவர்கள் வீடு கட்டி கொள்ளலாம். மூடிகெரே தாலுகாவில் மழை பாதிப்புகளை சரிசெய்ய வருவாய்த்துறை சார்பில் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் வங்கிக்கணக்கில் போதிய அளவு பணம் இல்லை. நான் நாளையும்(அதாவது இன்று) சிக்கமகளூருவில் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளேன்.
தொடர்பு இல்லை
டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஷயத்தில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஒருவேளை தன் மீது எந்த தவறும் இல்லை என்றால் டி.கே.சிவக்குமார் அதுகுறித்து விளக்கம் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது கலெக்டர் பாகதி கவுதம், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி அஸ்வதி, மூடிகெரே தொகுதி எம்.எல்.ஏ. குமாரசாமி, சிக்கமகளூரு மாவட்ட பா.ஜனதா தலைவர் ஜீவராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சுஜாதா ஆகியோர் உடன் இருந்தனர்.