கோடி லிங்கேஸ்வரர் கோவிலை மாவட்ட நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும் கோலார் தங்கவயல் கோர்ட்டு இடைக்கால உத்தரவு

கோடி லிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகி யார்? என்பதில் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கோவிலை மாவட்ட நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும் என்று கோலார் தங்கவயல் கோர்ட்டு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Update: 2019-09-19 22:00 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கம்மசந்திரா கிராமத்தில் கோடி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் 108 அடி உயர சிவலிங்கம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவ லிங்கங்கள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளன. இக்கோவிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக அரசு, சுற்றுலா தலமாக அறிவித்தது.

இந்த நிலையில் இக்கோவிலின் நிறுவனரான சாம்பசிவமூர்த்தி கடந்த ஆண்டு(2018) டிசம்பர் மாதம் 14-ந் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து இக்கோவில் அறக் கட்டளைக்கு சொந்தமான, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் ஏராளமான அசையும், அசையா சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை கோவிலின் அறக்கட்டளை செயலாளராக இருந்து வரும் குமாரி ஏற்றுக் கொண்டார்.

கோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் சாம்பசிவமூர்த்தியின் மகன் சிவப்பிரசாத், “நான் தான் கோடி லிங்கேஸ்வரர் கோவிலின் அடுத்த நிர்வாகி, எனது தந்தைக்கு பின் நான்தான் அனைத்து பொறுப்புகளையும் கவனிப்பேன்” என்று கூறிக்கொண்டு கோவில் விஷயங்களில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் நிர்வாகி யார்? என்பதில் அறக்கட்டளை செயலாளர் குமாரிக்கும், சிவப்பிரசாத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இப்பிரச்சினை குறித்து பேத்தமங்களா போலீசில் குமாரி புகார் செய்தார். அவர், சாம்பசிவமூர்த்தியின் மகன் சிவப்பிரசாத் தேவையில்லாமல் கோவில் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அவருக்கும் கோவிலுக்கும் இடையே எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் புகாரில் கூறியிருந்ததாக தெரிகிறது.

இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக கோலார் தங்கவயல் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.

இடைக்கால உத்தரவு

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாவனேஷ் நேற்று இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் அவர், “இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிக்கப்படும் வரை, கோவிலை மாவட்ட நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில் கோவில் விஷயங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு, உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கலெக்டர் நேரடியாக 3 பேரை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் குற்றப்பின்னணி இல்லாமல் கோவிலை நிர்வகிக்கும் திறமை, தகுதி பெற்றிருப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த தற்காலிக நிர்வாக கமிட்டியின் மேற்பார்வையில்தான் கோவிலின் அனைத்து பணிகளும் நடக்க வேண்டும். வரவு-செலவு கணக்குகள், கோவிலுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் அனைத்தையும் இந்த தற்காலிக நிர்வாக குழுதான் நிர்வகிக்க வேண்டும்” என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதியின் இந்த இடைக்கால உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்