ஊட்டி- குன்னூர் சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் - வாகன ஓட்டிகள் பீதி

ஊட்டி-குன்னூர் சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2019-09-19 21:45 GMT
ஊட்டி,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசன், 2-வது சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வருவதாலும், வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஊட்டி-குன்னூர் சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.

சத்துணவு மையத்தில் இருந்து தலையாட்டுமந்து, லவ்டேல் சந்திப்பு, வேலிவியூ, மந்தாடா வரை சாலை அகலப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக சாலையின் இருபுறமும் மலைகுன்றுகளில் இருந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.

தலையாட்டுமந்து பகுதியில் ஊற்று வந்து கொண்டே இருந்ததால், அவ்வப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்து கொண்டே இருந்தது. அதனை தொடர்ந்து சாலையில் கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால் தடுப்புச்சுவரை உயரமாக அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சில இடங்களில் மட்டும் தடுப்புச்சுவர் உயரமாக கட்டப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் லவ்டேல் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலை தடுப்புச்சுவரை ஒட்டி மண் அரிப்பு ஏற்பட்டது. தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்து குழாய் அமைக்கப்பட்டு அந்த தண்ணீர் சாலையில் விடப்பட்டதால் இந்த நிலைமை ஆனது.

இதனால் தடுப்புச்சுவர் அமைத்த மேல்பகுதியில் பெரிய பள்ளம் விழுந்து உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் சரிந்து சாலையில் விழலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. அதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதியுடன் கடந்து சென்று வருகிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் அதே பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டு, ஊட்டி-குன்னூர் இடையே போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள அந்த இடத்தில் தடுப்புச்சுவரை உயரமாக கட்டி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்