மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு, கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் நேற்று 10 ஆயிரம் லாரிகள் ஓடாததால் ரூ.25 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கோவை,
மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடவில்லை. கோவை லாரி பேட்டை, வடகோவை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந் தன.கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேலான லாரிகள் நேற்று ஓடவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் ரூ.25 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.5 கோடி அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ரூ.400 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ரூ.75 கோடி அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டது.
ஜவுளி, மோட்டார் பம்புகள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லாமல் முடங்கியது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் காய்கறி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு பிறகு மாலை 6 மணி முதல் லாரிகள் ஓட தொடங்கின. இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் லாரி போக்குவரத்து முழு அளவில் இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.