பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல் 10 மாணவ- மாணவிகள் உள்பட 23 பேர் காயம்

வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 மாணவ- மாணவிகள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2019-09-19 23:00 GMT
வேப்பந்தட்டை,

சேலம் மாவட்டம், வீரகனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடி, அரசடிக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை அரசடிக்காடு, பூலாம்பாடி பகுதியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி வேன் வீரகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆத்தூரில் இருந்து பூலாம்பாடி நோக்கி அரசு பஸ் வந்தது. பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

23 பேர் காயம்

இதில் பள்ளி வேனில் பயணம் செய்த குழந்தைகள் சன்மதி(வயது 6), தரனே‌‌ஷ்(8), ரகுநாத்(11), விகா‌‌ஷ்(11), மகேஸ்வரி(12) உள்பட 10 மாணவ- மாணவிகள் மற்றும் வேன் டிரைவர் சத்தியராஜ்(27) ஆகியோர் காயமடைந்தனர். இதேபோல் அரசு பஸ்சில் பயணம் செய்த சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த தாரணி(33), ஆணையம்பட்டி லட்சுமி(45), வீரகனூர் தேன்மொழி(40) உள்பட 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். மேலும் பள்ளி வேனை ஓட்டி வந்த வேப்படிபாலக்காடு கிராமத்தை சேர்ந்த சத்தியராஜை மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்