அபராதம் விதிக்கும் போலீசாரை கண்டித்து, சாலையில் ஜீப்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் - கூடலூரில் பரபரப்பு

கூடலூரில், அபராதம் விதிக்கும் போலீசாரை கண்டித்து சாலையில் ஜீப்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-19 22:30 GMT
கூடலூர், 

தேனி மாவட்டம் கூடலூர், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கேரள மாநிலத்துக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காபி தோட்டங்களுக்கே அதிக அளவில் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக கூடலூர், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த ஜீப்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில ஜீப்களை ஓட்டுபவர்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அத்துடன் ஜீப்களில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும் புகார் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிமெட்டு மலைப்பகுதியில் ஜீப் கவிழ்ந்து 4 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து குமுளி மலைப்பாதை, போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களிலும் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச்செல்லப்படுகிறார்களா? என்று சோதனையிடும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதேபோல் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

அதையடுத்து லோயர்கேம்ப் போலீசார் கடந்த 2 நாட்களாக குமுளி மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டு அபராதம் விதித்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து அபராதம் விதிப்பதை கண்டித்து நேற்று காலை கூடலூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையில் ஜீப்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த ஜீப்களில் பயணம் செய்யும் கூலித்தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஜீப் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிரைவர்களின் பிரச்சினை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜீப் டிரைவர்கள், தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்