தேனி அருகே பாதை வசதி கேட்டு தேசிய கொடியுடன் ஆண்கள் அரை நிர்வாண ஊர்வலம், 4-வது நாளாக போராட்டம்

தேனி அருகே பாதை வசதி கேட்டு தேசியகொடியுடன் ஆண்கள் அரைநிர்வாணமாக ஊர்வலம் சென்றனர்.;

Update: 2019-09-19 23:00 GMT
தேனி,

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறையால் வீட்டுமனை வழங்கப்பட்டு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இந்த மக்கள் பெரியகுளம் சாலையோரம் இருந்த தனியார் நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அந்த தனியார் நிலத்தின் உரிமையாளர் கோர்ட்டு உத்தரவு பெற்று, தனது நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளார். இதனால், இந்திரா காலனியில் வசித்த மக்கள் தங்களுக்கு பாதை வசதி இல்லை என்று கூறி கடந்த 16-ந்தேதி தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேறி ரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு புளியந்தோப்பில் குடியேறினர். தொடர்ந்து அங்கேயே தங்கி இருந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

4-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நேற்று காலையில் அந்த மக்கள் தங்களுக்கு பாதை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆண்கள் மேல்சட்டை அணியாமல் அரைநிர்வாண கோலத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் உலகநம்பி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தேசியகொடியை கையில் பிடித்தபடி, அரை நிர்வாண கோலத்தில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் பெண்களும் ஊர்வலமாக சென்றனர். சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் சென்ற நிலையில், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, ஊர்வலத்தை கைவிட்டு மீண்டும் புளியந்தோப்புக்கு பொதுமக்கள் சென்றனர். பின்னர், தேனி தாசில்தார் (பொறுப்பு) பிரதீபா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் காண்பிக்கும் மாற்றுப் பாதையில் சென்றால் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படும் என்றும், பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மாற்றுப்பாதை குறித்து நில உரிமையாளர் களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து அங்கேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், பொதுமக்களில் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று தங்களுக்கு பாதை வசதி கேட்டு மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்