இந்தியா முழுவதும் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-19 22:45 GMT
சீர்காழி,

சீர்காழியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கி, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 16 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணம் அடைவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டு 25 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. இதற்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. வெளிநாட்டினர் சாலை விதிமுறைகளை பின்பற்றுவதால், அங்கு விபத்துக்கள் மிகவும் குறைவாக உள்ளது. நம்நாட்டில் சாலை விதிமுறைகளை மதிக்காமலும், ஓட்டுனர் உரிமம் இன்றியும் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவது கிடையாது. அனைவரும் ஹெல்மெட் அணிந்தால்தான் சாலை விபத்துக்களை தவிர்க்க  முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக ரமேஷ்பாபு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் சீனுவாசன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ஹெல்மெட்டுகளை போலீசாரிடம் இலவசமாக வழங்கினார். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பொதுமக்களுக்கும், ஊர் காவல்படையினருக்கும் இலவசமாக வழங்கினார். முன்னதாக சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, புயல்பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்