தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீர் மறியல்

குடிநீர் வராததால் பொதுமக்கள் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2019-09-19 03:30 IST
தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ளது காசாநாடுபுதூர். இந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் மின்மோட்டார் பழுதானதால் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பம்புசெட் மோட்டாரில் தண்ணீர் பிடித்து வந்தனர். அதுவும் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து அவர்கள் 1 கி.மீ. தூரம் வரை சென்று தண்ணீர் பிடிக்க வேண்டி இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்து தண்ணீர் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் காசாநாடுபுதூர் பிரிவு சாலைக்கு வந்து காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்