89,777 டன் சரக்குடன் வந்த பெரிய கப்பலை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை
89 ஆயிரத்து 777 டன் சரக்குடன் வந்த பெரிய கப்பலை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை படைத்தது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு எம்.வி. என்.பி.ஏ. வேர்மீர் என்ற சரக்கு கப்பல் வந்தது. இந்த கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும், 14.16 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது.
இந்த கப்பல் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து 89 ஆயிரத்து 777 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. அங்கு 9-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
இங்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட 3 நகரும் பளுதூக்கிகள் மூலம் இந்த கப்பலில் இருந்து சரக்குகள் கையாளப்படுகிறது.
இதன்மூலம் வ.உ.சி. துறைமுகம் அதிக எடை கொண்ட கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்து உள்ளது. இதற்கு முன்பு 85 ஆயிரத்து 224 டன் சுண்ணாம்புக்கல் கையாளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் ஆகஸ்டு-2019 வரை 5.26 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் ஆகஸ்டு-2018 வரை 5.21 மில்லியன் டன் கையாளப்பட்டு இருந்தது.
இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், பளுதூக்கி எந்திரம் இயக்குபவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து 14 மீட்டர் மிதவை ஆழமுடைய பெரிய கப்பல்களை கையாளுவதால் தென்தமிழகத்தின் சர்வதேச கடல் வாணிபத்தில் முன்னேறி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.