திருப்பாலைக்குடியில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி; லாக்கரை உடைக்க முடியாததால் பணம்- நகைகள் தப்பின

மத்திய கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. லாக்கரை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள் தப்பியது.

Update: 2019-09-18 22:30 GMT
ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் தபால் அலுவலகத்தின் மேல்மாடியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை இயங்கி வருகிறது. வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலையில் வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்தநிலையில் மர்ம நபர்கள் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தாங்கள் கட்டியிருந்த கைலியால் முகத்தை மூடிக்கொண்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர்.

பின்பு தபால் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு கொள்ளையடிக்க நோட்டமிட்டுள்ளனர். தாங்கள் கொண்டு வந்த இரும்பு கம்பியால் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். உடைக்க முடியாததால் அங்கு வரவேற்பு அறையில் உள்ள செல்போனை மட்டும் எடுத்துக்கொண்டு பின்பு மாடியிலுள்ள வங்கியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர், அங்குள்ள லாக்கரையும் கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் திரும்பி உள்ளனர். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் முகமதுநசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மோப்பநாய் லைக்கா வரவழைக்கப்பட்டு அது மோப்பம் பிடித்தபடி தபால் அலுவலகத்தில் இருந்து கடற்கரை வரை ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகையை பதிவு செய்தனர். வங்கி லாக்கரில் பல லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் இருந்துள்ளன. லாக்கரை உடைக்க முடியாததால் அவை தப்பின.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடிக்க முயன்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்