ஈரோட்டில் பரிதாபம்; மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் சாவு
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு,
ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி ராணி (வயது 50). நேற்று முன்தினம் ரவிக்குமார் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் ராணியும், அவருடைய பேரன் ஜெயப்பிரகாசும் (6) இருந்தனர். இரவில் ரவிக்குமார் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் சமையல் அறையில் உள்ள கிரைண்டரில் மாவு அரைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் ராணியும், ஜெயப்பிரகாசும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கிரைண்டரின் சுவிட்சை ஆப் செய்தார். அப்போது கிரைண்டரில் இருந்து மின்சாரம் தாக்கி அவர்கள் 2 பேரும் கீழே விழுந்து கிடந்தது தெரிய வந்தது.
ரவிக்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மயங்கி கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதேபோல் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் இறந்தார். அதன் விவரம் வருமாறு:-
ஈரோடு பூந்துறைசேமூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (38). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் ஈரோடு கள்ளுக்கடைமேடு சீனிவாசா வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். அங்குள்ள மோட்டார் ஒன்றை சரிசெய்யும் பணியில் தியாகராஜன் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த தியாகராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தியாகராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.