விளைநிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு ஈரோட்டில் சட்ட நகல் எரிப்பு; விவசாயிகள் 43பேர் கைது
விளைநிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் சட்ட நகலை எரித்த 43 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியன சார்பில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் முடிவை கைவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடந்த 1885-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதிக்கு வரத்தொடங்கினார்கள். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தின் முன்பும், பெருந்துறை ரோடு பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் ஈரோடு சூரம்பட்டி எம்.எஸ்.குமரமங்கலம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு விவசாயிகள் சென்றனர். அங்கு அனைத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் நகல் எரிக்கும் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல தொடங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முகமது அலி முன்னிலை வகித்தார். கூட்டியக்க செயற்குழு உறுப்பினர்கள் கவின், பொன்னையன், குணசேகரன், பொன்னுசாமி உள்பட விவசாயிகள் பலர் கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர்.
இதில் விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும். ஏற்கனவே செயல்படும் திட்டங்களுக்கு மின் கோபுரத்துக்கும், மின்கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
புதிதாக செயல்படுத்தும் திட்டங்களை கேபிள் மூலமாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், ஊர்வலத்தில் நடந்து சென்றபோது விவசாயிகள், சட்ட நகல்களை எரித்து கோஷமிட்டனர். அதன்பின்னர் பெருந்துறை ரோடு அருகில் விவசாயிகள் சென்றதும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறிய போலீசார், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார். இதில் 43 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.