பெட்ரோல் ஊற்றி தீவைத்ததில் படுகாயம்: பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1¾ லட்சம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறும் சட்டக்கல்லூரி மாணவிக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-09-18 23:00 GMT
மதுரை,

தஞ்சை பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் எனது மகள் சட்டப் படிப்பு படித்தார். இவர் மீது கடந்த ஜூலை மாதம் வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதில் எனது மகள் படுகாயம் அடைந்தார். அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை.

எனது மகளுக்கு தமிழக அரசின் பெண்களுக்கான இழப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சம் வழங்கவும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆயிரம் செல்வகுமார் ஆஜராகி, “இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு கேட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் கடந்த 9-ந் தேதிதான் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவி தொடர்பான வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு, போலீசார் கடந்த 14-ந்தேதி உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதன்படி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்குள் மனுதாரர் இங்கு வழக்கு தொடர்ந்துள்ளார்” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், “சட்டக்கல்லூரி மாணவிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி டீன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வருகிற 23-ந்தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த வழக்கு 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்