போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.5 கோடி சொத்து அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.5 கோடி சொத்தை அபகரித்ததாக தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய சார்பதிவாளர் உள்பட 25 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-09-18 22:30 GMT
மதுரை,

மதுரை பை-பாஸ் ரோடு, பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை வழி பூர்வீக சொத்தாக பை-பாஸ் ரோடு துரைச்சாமி நகரில் 98 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். அந்த சொத்திற்கு எனது தந்தை மற்றும் 4 பாட்டிகளின் வாரிசுகள் என 25 பேர் உள்ளனர். எனவே அனைத்து வாரிசுகளும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் அந்த இடத்தை விற்பனை செய்ய முடியும்.

இதற்கிடையில் அந்த சொத்துக்குரிய வாரிசுகளின் பெயரில் போலி ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் அதலை செந்தில் உள்ளிட்ட சிலர் பத்திர அலுவலக சார்பதிவாளர் உதவியுடன் அந்த சொத்தை அபகரித்து கொண்டனர். பின்னர் அவர்கள் அந்த இடத்தை பலருக்கு விற்பனை செய்து விட்டனர். எனவே அதலை செந்தில், சார்பதிவாளர் உள்பட 31 பேர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் சொத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீசார் அவர்கள் 31 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்தர் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில் போலி ஆவணங்கள் தயாரித்து, மோசடி செய்து அந்த சொத்தை அபகரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அதலை செந்தில் உள்ளிட்ட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் போலியான ஆவணங்களை தயாரித்தவர்களையும், சொத்துக்கு உரிய வாரிசுகளின் கையெழுத்து மற்றும் அவர்களை முறையாக விசாரணை செய்யாமல் சொத்தை பதிவு செய்த சார்பதிவாளர் உள்பட 25 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகி அதலை செந்தில் மீது ஏற்கனவே ஈரோட்டில் ஒருவரின் சொத்தை அபகரித்து அவரை கடத்தி வந்து கொலை செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்